Thursday 5 September 2013

பிறைகளும், முஸ்லிம்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

                                      
பிறைகளும், முஸ்லிம்களும்
ரமழான், பக்ரீத் அல்லாத மாதங்களில் பிறைகளைப்பற்றி விவாதிப்பது விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தொலைநோக்குடன் சிந்தித்து, நடுநிலையுடன் நடந்து கொள்வதே இறைப்பொருத்தத்திற்கான வழியாகும். பிறைகள் விஷயத்தில் இந்திய முஸ்லிம்களிடம் பின்வரும் மூன்று விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
1) சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட காலண்டரின் கணக்கை ஒட்டி அந்தந்த பகுதிகளில் கண்களால் கண்டு, அரசு தலைமை டவுன் காஜி அறிவித்த பிறகே மாதங்களை கணக்கிடுவதும், பெருநாட்களை முடிவு செய்வதும்,
2) உலகத்தின் எப்பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அந்த அறிவிப்புகளை வைத்து மாதங்களை கணக்கிடுவதும், பெருநாட்களை முடிவு செய்வதும்,
3) கணிப்பின் அடிப்படையில் மாதங்களை கணக்கிடுவதும், பெருநாட்களை முடிவு செய்வதும் என மூன்று விதமான நடைமுறைகள் கையாளப்படுகின்றன.
இதில் முதல் வகையை பொறுத்தவரை குர்-ஆன் ஹதீஸ்களைப்ப்ற்றியோ, வானவியலைப்ப்பற்றியோ 99% பேருக்கு தெரியாது, தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை. ரமழான், பக்ரீத் போன்ற பண்டிகை மாதங்கள் நேரத்தில் மாத்திரம் பிறையை பற்றி பேசிவிட்டு மீதி பத்து மாதங்களை மறந்து விடுவது இதுவே இவர்களின் வாடிக்கையாகும். இது இவர்களின் இபாதத்துகள் விஷயத்தில் பிரதிபலிப்பதே இதற்கு போதுமான சான்று ஆகும்.

இரண்டாவது வகையை பொறுத்தவரை குர்-ஆன், ஹதீஸ் மட்டுமே இஸ்லாம் என்பதை அறிந்தவர்கள், பிறையை எந்த நாட்டில் கண்டாலும் அந்த அறிவிப்பை வைத்து உலகம் முழுவதும் நடைமுறை படுத்தலாம் என இவர்கள் சொன்னாலும், இக்கருத்தை உடையோர்கள் நம்ப தகுந்த அறிவிப்பாக கருதுவதும், ஏற்றுக்கொள்வதும் சவுதியின் அறிவிப்பை மட்டுமே! இதற்கு ஏற்றுக்கொள்ளும் விதமான சில காரணங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
a)  சவுதியை பொறுத்தவரை பாலைவனமாக இருப்பதால் வானம் தெளிவாக இருக்கும், எனவே பிறை தெரிவதில் தடங்கள்கள் வருவது அரிது.
b) அரபு மாதங்கள்தான் சவுதியின் ஆட்சி மாத்ங்கள் ஆகும். எனவே அந்நாட்டிற்கு வேலைக்கோ, ஹஜ் மற்றும் உம்ராவிற்கோ செல்வோர்க்ள் ஆங்கில மாதங்களை கணக்கிட்டு தங்கிவிட்டால் "ஓவர் ஸ்டே" குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
c)  எல்லா மாதங்களையும் பிறைகளை கண்களால் பார்த்தே கணக்கிடுவதற்காக இதற்கென்றே ஒரு வானியல் அறிந்த குழுவை ஈடுபடுத்தி, அவர்களின் துல்லியமான வழிகாட்டுதலை பிறைகள் விஷயத்தில்  நடைமுறை படுத்துவதால் சவுதியை பின்பற்றுவதே சரியானது என்கின்றனர்.
மூன்றாவது வகையினரைப் பொறுத்தவரை குர்-ஆன், ஹதீஸ் மட்டுமே இஸ்லாம் என்று அறிந்திருந்தாலும் அவர்கள் பிறையை கண்களால் பார்ப்பதுமில்லை, காதுகளால் கேட்பதுமில்லை, அது தேவையுமில்லை என்கின்றனர். அவர்கள் சொல்லக்கூடிய "லாஜிக்கான" காரணங்கள் இதோ
a) சூரியன், சந்திரன், பூமி மற்றும் எல்லா விதமான கோள்களும் குறிப்பிட்ட கால வரையறைக்குள்தான் இயங்குகின்றன. இதற்கான குர்-ஆன் வசனங்களை எடுத்து கூறி, அல்லாஹ் கணக்கிடும் விதத்தில்தான் இவற்றை படைத்திருக்கிறான். இஸ்லாம் அறிவியலுக்கு முரண்படாத மார்க்கம், எனவே வானியல் அறிஞர்களின் கூற்றை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்துவதே மட்டுமே சரியாகும்.
b) இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி "காபா"வை கட்டிமுடித்து யாருமில்லாத வனாந்திரத்தில் அழைப்பு (பாங்கு) விடுக்கையில், மெலிந்த ஒட்டங்களிலும், குதிரைகளிலும், கோவேரிக்கழுதைகளிலும் ஹஜ்ஜுக்கும், உம்ராவிற்கும் வருவார்கள் என்ற பொருள்பட வரும் வசனத்தை காரணம் காட்டி இது அல்லாஹ்'வுடைய நேரடி கட்டளை ஆனால் இன்று நாம் விமானங்களில் செல்வது தவறில்லையா? அதே போல ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் தொழுகை நேரங்களையும் கண்களால் பார்த்தே முடிவு செய்தார்கள், ஆனால் இன்று அப்படியா நடைமுறையில் இருக்கிறது, நிரந்தர தொழுகை நேரங்கால அட்டவணை முறையை அமல் படுத்தவில்லையா? அது போலத்தான் இதுவும். சூரிய கணக்கை கணிப்ப்து போல சந்திரக் கணக்கையும் துல்லியமாக கணித்து இனி வரக்கூடிய ஆண்டுகளுக்கான காலண்டர்களை தயாரித்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் மாதங்களையும், பெருநாட்களையும் நடைமுறைப் படுத்த வேண்டும். காலப்போக்கில் ஹிஜிரி காலண்டரை ஏற்று கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிடும்.
c) பூமி கிழக்கில் இருந்து மேற்காக சுற்றி வருகிறது, நாம் வாழக்கூடிய இந்தியாவிற்கு முன்னதாக கிழக்கில் மலேசியாவும், பின்னதாக மேற்கில் சவுதியும் நேரத்தைப் (ஜி.எம்.டி. யை) பொறுத்தவரை இரண்டரை மணி நேர சம தூரத்தில் இருக்கின்றன. மலேசியாவும், சவுதியும் ஒரே நாளில் பிறை பார்த்து பெருநாட்களை கொண்டாடுகின்றனர். ஆனால் இவை இரண்டு நாடுகளுக்கும் மையத்தில் இருக்கும் இந்தியாவில் மட்டும் பிறை தெரியவில்லை என்றால் பிறை தெரியவில்லையா? அல்லது நாம் பார்க்க தவறிவிட்டோமா? நாம் பார்க்க தவறிவிட்டோம் என்பதே சரியாகும்.
d) இந்தியாவைப் பொறுத்தவரை அம்மாவாசைக்கென ஒரு நாள், பாட்டிஅம்மைக்கென ஒரு நாள், அதன் பிறகே பிறை தேடும் தவறான வழக்கத்தை கொண்டுள்ளனர்.  ஆங்கிலத்தில் இதுபோல வாசக அமைப்பு இல்லை, அம்மாவாசை என்றால் ஆங்கிலத்தில் நியூ மூன் (புது பிறை) என்றுதான் வாசக அமைப்பு வருகிறது. எனவே அம்மாவாசை தினத்தையே புது பிறையாக கணக்கிட்டு கொள்வதே அறிவிற்கு உகந்ததாகும்.
e) ஜி.எம்.டி, தேதிக்கோடு என சில காரணங்களை கூறி உலகத்தில் சம நேரத்தில்  தேதிக்கோடுக்கு முன்னே இருப்பவர்கள் ஜும்-'வுடைய தொழுகையும் தேதிக்கோடுக்கு பின்னே இருப்பவர்கள் வியாழக்கிழமையுடைய ளுஹர் தொழுகையும் தொழுகின்றனர். உலக மக்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது அகிலத்தை படைத்து பரிபாலிக்கக்கூடியு அல்லாஹ்வுடைய ஏற்பாடாகும். எனவே அம்மாவாசை தினத்தை "நியூ மூன்" என புதிய மாதமாக கணக்கிட்டு தேதிக்கோட்டின் அடிப்படையில் ஜி.எம்.டி வரிசையில் 24மணி நேரத்திற்குள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளை கொண்டாடி முடித்துவிடலாம். சர்ச்சைகள் இல்லாமல் மாதங்களை கணக்கிடவும், இபாதத்துகள் செய்யவும், பெருநாட்களை கொண்டாடவும் சர்வதேச தலைப்பிறையை ஏற்று நடைமுறை படுத்துவதே சாலச்சிறந்தது என்கின்றனர்.
இந்த வெவ்வேறான நிலைப்பாடுகள் மாறி, சமூக ஒற்றுமை தலைத்தோங்க குர்-ஆன் ஹதீஸ் வழியில் சில கருத்துகள், லாஜிக்கான சில ஆலோசனைகள் இதோ
1) இணை வைப்பு, குஃப்ரான, காரியங்களில் ஈடுபடாத, "ஷியாயிஷ" கொள்கையை பின்பற்றாத, இறைவனுக்கு அஞ்சக்கூடிய, சூரிய, சந்திர ஓட்டத்தை படித்த அல்லது அதன் மீது அக்கறையும், ஆர்வமும் கொண்ட மார்க்கம் அறிந்த மார்க்க அறிஞர்களை பிறைகளை அறிவிக்ககூடிய அறிவிப்பாளர்களாக நியமிக்க கூறி அரசை வலியுறுத்துதல், அல்லது டவுன் காஜி சட்டங்களை புதுப்பித்துதிருத்தியமைக்கக்கோரி அரசை வலியுறுத்துதல், இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானங்களை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.
(வாழ்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மாநாடுகள் பல நடத்தி, மத்திய, மாநில ஆட்சியாளர்களை நேரில் சந்தித்த நாம் ஏன் இந்த ஒரு விஷயத்தை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. ஒரு வேளை மக்கள் செல்வாக்கு சரிந்துவிடுமோ அல்லது ஓட்டு வங்கி அரசியல் பாதிக்கப்பட்டுவிடுமோ என்பதாலா?)

2) இன்னும் எந்த அறிவியல் முன்னேற்றமும் செய்யாமல் உக்கி,மக்கிப்போன பஞ்ஞாங்கத்தையே புரட்டிக்கொண்டிருக்காமல், தொலைநோக்கி, செயற்கைக்கோள் வழியாக கண்களால் பிறைகளை காண அறிஞர்களை நியமிக்க கோரி அரசை நிர்பந்திக்க வேண்டும். ஒரு வேளை அது நடக்காத பட்சத்தில், அனைத்து முஸ்லிம்களும் ஒன்றினைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இது போன்ற நவீன யுக்திகளை கையாளுவதின் மூலம் சவுதியை விட இரண்டரைமணி நேரத்திற்கு முன்னால் நம்மால் பிறையை கண்களால் கண்டு அறிவித்து விடமுடியும் "இன்ஷா அல்லாஹ்"!!! அல்லாஹ் நமக்கு அருள் புரியட்டும்.

(பொதுவாக ஒரு புது பள்ளிவாசலை உருவாக்கி விடுவதென்பது பணம் படைத்த, அல்லது பணத்தை வசூல் செய்ய துணிவு கொண்ட யார் வேண்டுமானாலும் செய்து விட முடியும். ஆனால் ஏற்கனவே உள்ள பள்ளிவாசலில் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை அவர்களுக்கு விளங்க வைத்து, அல்லாஹ்'வுடைய அருளால் நிர்வாகத்தை அடைந்து கொண்டு வழி நடத்துவது சாதரண காரியமல்ல. இது போன்ற கடின முயற்சிகளால் மட்டுமே சமூக மாற்றங்களை கொண்டு வரமுடியுமே தவிர வேறெந்த வழிகளும் முன்னேற்றதிற்கான வழிகளாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே அல்லாஹ்'வுடைய அருளால் நாங்கள் பள்ளிவாசலின் நிர்வாகத்தை அடைந்து கொண்டு சமூக தலைவர்களை ஒருங்கினைத்து இது போன்ற நவீன வழிகளை முதல் முறையாக பிறை விஷயத்தில் அமல்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனை எங்களின் கைகளால் முதன் முதலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆசை அளவு கடந்து இருந்தாலும், எங்களின் முயற்சியிலேயே எங்களின் காலத்தை அல்லாஹ் கடக்க வைத்துவிட்டால் மறுமை விசாரணையில், நல்ல சிந்தனைகளை உள்ளத்தில் தோற்றுவித்தவன் நான் அல்லவா? மக்கள் முன் எடுத்து வைத்திருந்தால் நடைமுறைப்படுத்த சக்தி பெற்றவர்கள் நடைமுறைப்படுத்தியிருப்பார்களே என்று அல்லாஹ் எங்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவும், வேறு யாரேனும் நடைமுறைப்படுத்தினாலும் அதற்குரிய நன்மைகளை சிரமமின்றி அடைந்து கொள்வதற்காகவும், மேலும் இந்நடைமுறை அமல் படுத்தப்பட்டு அது அமலில் இருக்கும் காலமெல்லாம் "ஸதக்கத்து ஜாரியாவாக" எங்களின் மண்ணறைகளைத் தாண்டி மறுமைவரை எங்களை பின் தொடரும் என்ற இந்த காரணம் ஒன்றைத்தவிர வேறு எந்த காரணமும் இதனை எழுத எங்களைத் தூண்டவில்லை.)

3) சர்வதேச தலைப்பிறை கருத்தை கொண்டவர்களைப் பொறுத்தவரை குர்-ஆனில் வசனங்களின் வாசக அமைப்பைபுகளை முன் வைத்து தங்களுடைய வாதத்திற்கு வழு சேர்க்கின்றனர். குர்-ஆன் வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) எப்படி விளக்கினார்களோ, சஹாபாக்கள் எப்படி விளங்கிக் கொண்டார்களோ அப்படி விளங்கி கொள்வதே இறைப் பொருத்தத்திற்கான வழியாக இருக்க முடியும். உதாரணமாக,
a)   ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்'வுடைய சின்னங்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர் அவ்விரண்டையும் (தவாப் செய்வது) சுற்றுவது குற்றமில்லை (அல்குர் ஆன்.2:158)
இந்த வசனத்தை யாருடைய மொழி பெயர்ப்பை எடுத்து படித்தாலும் ஸஃபா, மர்வாவை சுற்றுவது குற்றமில்லை என்றுதான் மொழி பெயத்துள்ளார்கள். ஏனெனில் தவாப் எனும் சொல்லுக்கு சுற்றுவது என்பதுதான் அர்த்தம். ஆனால், ஹஜ்ஜுக்கோ உம்ராவிற்கோ செல்பவர்கள் ஸ்ஃபா, மர்வா மலைகளை சுற்றுவது இல்லை. மாறாக தொங்கோட்டம்தான் ஓடுகின்றனர். அதேபோல "ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர் அவ்விரண்டையும் (தவாப் செய்வது) சுற்றுவது குற்றமில்லை" என்ற வாசக அமைப்பை பார்த்துவிட்டு ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர்கள் ஸஃபா, மர்வாவை விரும்பினால் தவாப் செய்யலாம், விரும்பாவிட்டால் தவாப் செய்யாமல் விட்டுவிடலாம் என பொருள் கொண்டு அமல் படுத்த முடியுமா? ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒடத்தான் கற்றுகொடுத்தார்கள். ஸஃபா, மர்வா தொங்கோட்டம் ஓடவில்லையெனில் ஹஜ்ஜோ, உம்ராவோ முழுமை பெறாது.
b) அதுபோலவே, குர்-ஆனில் ஜக்காத்தை பற்றி வரக்கூடிய ஒரு வசனத்தின் வாசக அமைப்பில் "ஜக்காத்தை கொடுத்தால் ஜக்காத்தை பெற்றுக் கொண்டு அவருக்காக நபியே நீங்கள் துவா செய்யுங்கள்" என்று வருவதால் நபிகள் நாயகம் (ஸல்) இப்போது உயிருடன் இல்லை என்பதால் நாங்கள் ஜக்காத்தை தரமாட்டோம் என யாரேனும் பொருள் கொள்ளலாமா? நடைமுறைப்படுத்தலாமா? கூடாது. ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு இந்த வசனத்திற்கான பொருளை இப்படி கற்றுக்கொடுக்கவுமில்லை, சஹாபாக்கள் அப்படி விளங்கிக் கொள்ளவுமில்லை. எனவே குர்-ஆனை விளங்கி கொள்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அதற்கு எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி விளங்கிக் கொண்டு அமல் செய்வதே இறைப்பொருத்ததிற்கான வழியாக அமையும்.
c)  லாஜிக்கான காரணங்களாக இவர்கள் சொல்லக்கூடிய "நியூ மூன்" காண்செப்டை பொறுத்தவரை தமிழில் சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அத்தான் போன்ற சொற்களுக்கு ஆங்கிலத்தில் "அங்கிள்" என்ற ஒத்தை சொல் மட்டுமே அர்த்தமாக இருப்பதால் இந்த சொந்தங்கள் எல்லாம் ஒன்றுதான் என புரிந்து கொள்வது சரியாகுமா? அதேபோல உறுது மொழியில் சிச்சா, தாயா, மாமு, பாய்ஜான், கலை, ஃபுப்பா போன்ற சொற்களுக்கு ஆங்கிலத்தில் "அங்கிள்" என்ற ஒத்தை சொல் மட்டுமே அர்த்தமாக இருப்பதால் இந்த சொந்தங்கள் எல்லாம் ஒன்றுதான் என புரிந்து கொள்வது சரியாகுமா? இப்படி புரிந்து கொண்டால் நமது புரிதல் எப்படி தவறாகிறதோ அதேபோல அம்மாவாசை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் தனி அர்த்தம் இல்லை என்பதால் அம்மாவாசையும் "நியூ மூன்"-ம் ஒன்று என புரிந்து கொள்வதும் தவறாகும்.
d) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை கடைப்பிடித்ததற்கும், பிறைகளைக் கடைப்பிடித்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பிறைகளை பொறுத்தவரை 29-ஆம் நாளன்று பிறையை தேடுங்கள், பிறை தென்படவில்லை எனில் 30 நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள், தொழுகை நேரங்களை பொறுத்தவரை நீங்கள் ளுஹருடைய கடைசி நேரத்தில் அஸரை தேடுங்கள் என்று சொல்லவில்லை மாறாக தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை ஆகும். தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சூரிய ஓட்டத்தின் மூலம் தொழுகை நேரங்களை கணக்கிடுவதையும், பிறைகளைக் கொண்டு மாதங்களை கணக்கிடுவதையும் ஒன்றாக கருதுவது லாஜிக்காக இடிக்கிறது.
e) பிறை சம்பந்தமான ஹதீஸ்களில் மறைத்து கொண்டால் எனும் வாசக அமைப்பு வருவதால் கண்களால் அதாவது தொலைநோக்கி வழியாகவோ, செயற்கைகோள் வழியாகவோ, இவை இரண்டிற்கும் வழியில்லாத பட்சத்தில் குறைந்தது வெறும் கண்களாலாவது கண்டிப்பாக காண வேண்டும் என தெளிவாகிறது. அதேநேரத்தில் எல்லோரும் பிறையை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. மாறாக தகுதியுள்ளவர்களை உள்ளடக்கிய குழு அமைப்பை இதற்கென ஏற்படுத்தினார்கள். குறந்தபட்சம் பிறை கண்களுக்கு புலப்படும் நாளை அதாவது அம்மாவாசைக்கு அடுத்த நாளை கணக்கில் எடுத்துக் கொண்டு கணிப்பை அமல்படுத்தினாலே தெளிவு கிடைத்துவிடும். அதைவிடுத்து பிறை கண்களுக்கு புலப்படாத நாளான அம்மாவாசை அன்று "நியூ மூன்"- அனுசரிப்பது "பகலிலே பசு மாடு தெரியவில்லையாம், இருட்டிலே எருமை மாட்டை தேடினானாம்" என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.
எனவே எதார்த்தங்களை விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் சிந்தித்து நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை அறிவியலுக்கு முரண்படாத வகையில் விளங்கிக் கொண்டு அமல் செய்வதன் மூலம் ஒரே நாளில் பெருநாட்களை கொண்டாடி இஸ்லாம் முரண்பாடுகள் இல்லாத மார்க்கம், முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகள் மற்றும், குழப்பங்கள் இல்லை என்பதை உலகிற்கு பறைசாற்றி மாபெரும் சமூக மாற்றத்திற்கு வித்திடுமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ்' நமது முயற்சிகளுக்கு கூலி வழங்குவானாக!



இந்நிலைப்பாடிற்கு மாற்றமான கருத்துகளை சாடிட நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதுபோன்ற நடைமுறைகளை நான் கையாளவில்லை. ஏனெனில் ஒரு தவறான புரிதலை சுட்டிக்காட்டும் போது அதைவிட அழகானதைக் கொண்டே சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையாகும். இதுபோன்ற நடைமுறைகள் குர்-ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என போதிப்பவர்கள் 99% பேரிடம் இல்லை. இதற்கு எந்த அமைப்புகளும் விதிவிலக்கு அல்ல என்பது கசக்கும் உண்மையாகும். மனிதன் என்ற விதத்தில் யாரையேனும் எனது எழுத்துகள் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், "இன்ஷா அல்லாஹ்" எனக்காக துவா செய்யுங்கள்.
                                        
அன்புடன் திருச்சி.ரிஸ்வான்.